கார்த்திகை மாத அமாவாசை தினத்தில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி கூடுதல் டோக்கன்கள் பதிவு செய்யப்படும் என பதிவுத் துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடக்கும் என்பதால், அன்றைய தினம் பதிவு செய்வதற்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாத அமாவாசை தினமான டிசம்பர் 5-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறவுள்ளதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்களிடம் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையொட்டி டிசம்பர் 5-ம் தேதி ஒரு துணை பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 துணை பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும், அதிக அளவு பத்திரப்பதிவு உள்ள 100 அலுவலகங்களுக்கு டோக்கன்களும் வழங்கப்படும்.
100-க்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்களும், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.