சென்னை: இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவ்வப்போது அதனை பராமரித்தல் அவசியம் ஆகும். இதனால் வாகனம் அடிக்கடி பழுதாகாது. ஸ்கூட்டர், பைக், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை பராமரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பெட்ரோல், ரிசர்வ் நிலையில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் பின் டயர்களில் சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். டயர்களில் உள்ள சிறு சிறு கற்களை அகற்ற வேண்டும்.
ஆயிலுக்கு தனியாக டேங்க் இருந்தால் அதையும் சரி பார்க்க வேண்டும். பிரேக், கிளட்ச் ஆக்சிலேட்டர் சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஹாரன், லைட் ஆகியவை சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுவாக 2 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியதும் சர்வீஸ் செய்வது நல்லது. இதேபோல் உற்பத்தியாளர்கள் கொடுத்த ஆலோசனைப்படி என்ஜினிலும், கியர் பாக்சிலும் ஆயில் மாற்றம் செய்ய வேண்டும்.
எந்த சிறு பிரச்சினையையும் உடனடியாக கவனித்து ரிப்பேர் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். இது அதிக சேதத்தை தவிர்க்க உதவும். அங்கீகாரம் பெற்ற டீலர் மற்றும் சர்வீஸ் நிலையங்களில் வாகனத்தை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்யவும் வேண்டும்.
உதிரி பாகங்களை மாற்றும் போது போலியானவைகளை உபயோகிக்க கூடாது. தரமானவைகளையே பயன்படுத்த வேண்டும். மோட்டார்சைக்கிள், மொபட் ஸ்கூட்டர்களில் 2டி ஆயில்களை உபயோகிக்க வேண்டும். அவை தான் என்ஜின் ஆயுளை நீட்டிக்க செய்யும்.
இருபுறம் உள்ள மிர்ரர்களை சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
செயின் உரசுவது போலவோ அல்லது இடர்பாடான சத்தம் வந்தால் உடனடியாக சரி பார்க்க வேண்டும். தொடர்ந்து வண்டிகளை இயக்கி வரும்போது செயின் தளர்வடைந்து விடும். இதனால் பற்சக்கரம் பாதிக்கப்படும்.
பின்பக்கம் எச்சரிக்கை விளக்கு எரிகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் இருட்டான பகுதிகளில் செல்லும் போது நமக்கு பின்னால் வரும் வாகனங்கள் சிவப்பு விளக்கு எரிவதை கண்டு ஒதுங்கி செல்ல வழி வகுக்கும்.
மழைக்காலத்தில் வெளியில் வாகனத்தை நிறுத்தும் போது சைட் ஸ்டேண்ட் போடக்கூடாது. மெயின் ஸ்டேண்ட் போட்டு நிறுத்துவதால் மழைத்துளிகள் வாகனத்தின் இன்ஜின் பகுதியில் விழுவதை தவிர்க்கலாம்.
வாகனத்தின் பேட்டரியை குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றி விட வேண்டும். இல்லாவிடில் வாகனம் பழுதடைய வாய்ப்புகள் ஏற்படும்.