சென்னை: சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகளை மொத்தம் ரூ.7.5 கோடி செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்படுத்தப்படாத நகர இடங்களை மேம்படுத்துவதையும், மக்கள் மற்றும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, தி.நகர் வடக்கில் உள்ள உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

இங்கு, தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து, இரு சக்கர வாகனங்களுக்கான மின்சார சார்ஜிங் வசதிகள், இரு சக்கர வாகனங்களுக்கான பிரத்யேக பார்க்கிங் வசதிகள், உள்ளூர் வணிகத்தை மேம்படுத்த 5 சிறிய கடைகள், 8 கழிப்பறைகள் (ஆண்களுக்கு 3, பெண்களுக்கு 3, மாற்றுத்திறனாளிகளுக்கு 2), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மரங்கள், செடிகள், அலங்கார விளக்குகள், பயணிகளுக்கான இருக்கை வசதிகள், சிசிடிவி கேமராக்கள், திசை அடையாளங்கள், பார்வையற்றோருக்கு உதவும் தொட்டுணரக்கூடிய பாதை, மழைநீர் வடிகால் மற்றும் பராமரிப்புக்கு ஏற்ற தரைத்தளம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.
ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலை-சிபி ராமசாமி சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியும் ரூ. 3.75 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங், வணிக கடைகள், மரங்கள், அலங்கார விளக்குகள், இருக்கை பகுதிகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் ஆகியவை இங்கு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.