புதுடெல்லி: லோக்சபாவில் திருச்சி எம்பி துரை வைகோ பேசியதாவது:- 14 லட்சம் எல்ஐசி முகவர்களின் கோரிக்கையின்படி, முதலாம் ஆண்டு கமிஷன் தொகையை குறைக்கக் கூடாது. மேலும், மொத்த கமிஷனையும் அதிகரிக்க வேண்டும். பாலிசி எடுப்பதற்கான வயது வரம்பை 60 ஆக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.
திருச்சியில் மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திமுக எம்பி கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ராஜ்யசபாவில், “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு என்ன செய்துள்ளது.
சில பகுதிகளில் குடிநீரில் புளோரைடு கலந்துள்ளது. அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் வி.சோமண்ணா, “பாதுகாப்பான மற்றும் குடிநீர் குழாய் நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புளோரைடு உள்ளிட்ட ரசாயன மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 10 சதவீதம் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது” என்றார்.