சென்னை: சென்னை மெட்ரோ ரயிலுக்குள் உணவு உண்பதற்கு அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அதிவேக பயணத்திற்காகவும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. சென்னையில் மக்களின் பயணத்தை எளிதாகவும், வேகமாகவும் மேற்கொள்ள பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் உள்ளன. அதில் முக்கியமானது மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் பல்வேறு இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்திற்கும் சில விதிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். சென்னை மெட்ரோ ரயிலுக்குள் இனி உணவுக்கு அனுமதி இல்லை. அனைத்து பயணிகளும் மெட்ரோ நெறிமுறைகளை பின்பற்றி சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.