திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி சமாளிக்க முடியாமல் திணறுகிறார் எனக் கூறினார். தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சனையை மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தீர்க்க முயலக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என எடப்பாடி பேசியதை குறிவைத்து, “இது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அரசியல் சிக்கலை மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்கி தீர்க்க முயல வேண்டாம்” என கடுமையாக தாக்கினார். மேலும், பசும்பொனுக்கு பாரத ரத்னா கோரிக்கை வைப்பது அரசியல் லாப நோக்கத்துடன் செய்யப்படுவதாக விமர்சித்தார்.
திமுக தொடர்பான பிரச்சனைகளையும் அவர் எடுத்துரைத்தார். சாதி அடிப்படையில் பேசிய நிர்வாகியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்றும், தீண்டாமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நான்கரை ஆண்டுகளாக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் இருக்கும் திமுக அரசு, மீதமுள்ள காலத்தில் எதையும் சாதிக்க முடியாது என அவர் சாடினார்.
அடுத்த தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பில், “ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில்தான் எங்கள் ஆதரவு இருக்கும். தவெக நாளுக்கு நாள் வளர்ச்சி பெறுகிறது, அதையும் கருத்தில் கொண்டு தான் எங்கள் கூட்டணி திட்டம் அமையும்” எனக் கூறினார். இதனால் 2026 தேர்தலை நோக்கி கிருஷ்ணசாமியின் அரசியல் நிலைப்பாடு தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.