சென்னை ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் பாஜக தலைவருமான அண்ணாமலையும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்த நிலையில், இந்த நிகழ்வில் இணைந்து அமர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக – பாஜக கூட்டணி பிரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டவர் அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குறிவைத்து விமர்சித்ததும், கூட்டணி எதிர்காலம் குறித்துப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதும் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும், அடுத்த கட்டத்தில் அவர் திடீரென அதிமுகவினருக்கு ஆதரவாகக் கருத்துக்களை தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த மாற்றம் அதிமுகவினருக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிளவை மறைக்கவில்லை. ஆனால், மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டபோது, அண்ணாமலையையும் அருகில் அமர வைத்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மறைமுகமாகவே மோதிக் கொண்ட இருவரும், இப்போது ஒன்றாக அமர்ந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையிலான உறவு மீண்டும் வலுவடைவதாக இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. இதனால் அரசியல் நிலைமைகள் புதிய திருப்பத்தை எடுக்குமா என்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.