அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் தனது “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எனும் எழுச்சி பயணத்தை கடந்த 7, 8-ஆம் தேதி நடத்தினார். நான்கு தொகுதிகளில் நடைபெற்ற இந்த பயணத்தில் மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவித்தனர். மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு மனம் நொந்ததாக அவர் கூறினார்.

திமுக ஆட்சி எதிர்பார்த்ததைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், சட்ட ஒழுங்கு, பொருளாதாரம், விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகள் அனைத்தும் சரிந்துவிட்டதாகவும் கூறினார். மின்சாரம், வரி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் மக்கள் கடும் சுமையை சந்திக்கின்றனர். அரசாங்கம் கூறிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையில் சம்பள விதிமீறல்கள், ஓய்வூதிய திட்டம் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை எனவும் விமர்சித்தார். பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள், காவல் நிலைய மரணங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன என்றும் குற்றம்சாட்டினார். இது அனைத்தும் திமுக ஆட்சியின் தோல்விக்கே சாட்சி எனவும், 2026 தேர்தலில் இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவுகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
கடந்த 50 மாதங்களில் ரூ.4 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் மக்கள் மீது சுமத்தப்பட்டது என்பது மட்டுமே திமுக ஆட்சியின் பரிசு என கூறினார். மக்கள் மத்தியில் திமுக அரசின் மீது கடும் கோபம் இருப்பதை நேரில் உணர்ந்ததாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எனவும் தெரிவித்தார்.
திமுக அரசு ஒவ்வொரு திட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளதாகவும், வெறும் புகைப்படங்கள் ஒட்டுவதில் மட்டுமே திறமை காட்டுவதாகவும் பழனிசாமி விமர்சித்தார். இந்த அரசின் முடிவுக்கு நேரம் அருகில் இருப்பதாக அவர் உறுதிபட கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கோவையில் மக்கள் கொடுத்த பேராதரவும், உற்சாகமும் இதற்கான சான்றாக இருப்பதாகவும் கூறினார்.