திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆவேசத்துடன் உரையாற்றினார். “அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. எவ்வளவோ பேர் உடைக்க முயன்றாலும், தொண்டர்களின் உறுதியால் அதை யாராலும் சிதைக்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு எவரும் இல்லை. இங்கு இருக்கும் மக்கள் நீங்கள்தான் அவர்களின் உண்மையான வாரிசு” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர், “அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ., எம்.பி., முதலமைச்சர், பொதுச் செயலாளர் ஆக முடியும். தொண்டர்களின் கட்சி என்பதால் அதிமுகவின் வேர்களை எந்த கொம்பனாலும் பிடுங்க முடியாது” என்று பெருமையாக கூறினார்.
அதே நேரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி, “தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாட்களே இல்லை. மாணவர்கள் போதைப்பொருள் அடிமையாகி தவிக்கும் சூழல் நிலவுகிறது. மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. வரும் தேர்தலில் திமுக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்” என அவர் உறுதியளித்தார்.
இந்த உரையின் மூலம், எதிர்கால தேர்தலுக்கான தனது அரசியல் திசையையும், அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார். திண்டுக்கலில் நிகழ்ந்த இந்த உரை, அதிமுகவின் அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.