சென்னை: தமிழ்நாட்டில், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக ரூ.208 கோடி செலவில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
ரூ.47.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையையும், பேருந்துகளை மின்மயமாக்க தேவையான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிமனை உள்ளிட்ட வசதிகளையும் அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், அதிகாரிகளுடன் கடந்த 6-ம் தேதி பணிமனையை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 மின்சார ஏசி பேருந்துகளும், 80 மின்சார பேருந்துகளும் இயக்கப்படும்.