கடற்கரை – எழும்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள 4-வது ரயில் பாதை ஆய்வு செய்யப்பட உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து ஆய்வு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக இன்று காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக தாம்பரம்-கோடம்பாக்கம் இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மாலை 4.10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை சீராகும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 25 பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் டெர்மினலில் இருந்து பிராட்வேக்கு 20 பஸ்கள், பல்லாவரம் பஸ் டெர்மினலில் இருந்து செங்கல்பட்டுக்கு 5 பஸ்கள் உட்பட 50 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க முக்கிய பஸ் நிலையங்களில் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.