சிவகிரி: கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளான யானை, காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் ஒரு பகுதியில் வனத்துறையினரால் துரத்தப்படும் போது, மற்றொரு பகுதி வழியாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. குறிப்பாக, யானைகள் பகலில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்களில் உள்ள புதர்களுக்குள் ஒளிந்து கொள்கின்றன.
இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சோலார் மின் வேலிகளும் பலனளிக்கவில்லை. சோலார் மின் வேலிகளை சேதப்படுத்திய யானைக்கூட்டம் விவசாய நிலங்களுக்குள் எளிதில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலாபுரம், குலசேகரப்பேரி பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தின.

இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி முருகையா கூறுகையில், ”கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி, சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை சேதப்படுத்தின. எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.