பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:-
மக்களுக்காக பாடுபட்டவர்களுக்கும், விடுதலைக்காக போராடியவர்களுக்கும் மணிமண்டபம் கட்டி முதல்வர் அரசு விழாவாக கவுரவித்து வருகிறார். இதேபோல் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு ரூ.3 கோடி மதிப்பில் 8,460 சதுர அடியில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
வரும் டிசம்பருக்குள் இப்பணியை முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். மணிமண்டபம் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து மணிமண்டபங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்நோக்கு மண்டபம் கட்ட வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரமக்குடி இமானுவேல் சேகரன் மணிமண்டத்தில் 500 பேர் அமரும் வகையில் பல்நோக்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 150 பேர் அமரும் வகையில் கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.