ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஊராட்சியில் ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி அணையில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆந்திர மாநில எல்லையில் இருந்து தொடங்கி நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை வழியாக ஏரிக்கு செல்கிறது.

இந்த கால்வாய் கடந்த ஆண்டு இறுதியில் தூர்வாரப்பட்டது. இந்நிலையில், இந்த கால்வாய் கரையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் கலந்து, கழிவுநீர் மட்டும் கால்வாயில் செல்கிறது. இதனால், ஏரி நீர் மாசுபட்டு, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
எனவே, இந்த கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.