ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழச்சாறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன.
பூங்கா மற்றும் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலு, வெல்லம், ஊறுகாய், பழச்சாறுகளும் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு வகையான மரக்கன்றுகள், தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, ஊட்டி அருகே தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை தோட்டத்தில் தேயிலை நாற்றுகள், பேரிக்காய், சைப்ரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தேயிலை தோட்டத்தில் 2,000 தேயிலை நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த நாற்றுகளை உற்பத்தி செய்த பின், குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.