பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 110 பேருக்கு பணி நியமன ஆணை எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து துறையை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 312 பேர் பங்கேற்றனர்.
இதில், சென்னை டி.வி.சுந்தரம் பார்சனர்ஸ் (டிவிஎஸ் குரூப்) நிறுவன வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரத் சங்கர், வெங்கடேசன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மாணவர்களை தேர்வு செய்தனர்.
இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்றது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் கலந்துகொண்டு வளாக நேர்முகத் தேர்வில் தேர்வான 110 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தேர்வான மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை ஊதியமாக கிடைக்கும்.
முன்னதாக கல்லூரி மாணவர்களின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி ஒன்றையும் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் சி.ராணி, நா.பழனிவேல், ஞானசேகரன், ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருள்மொழி செய்திருந்தார்.