சென்னை: அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பங்குகளை முறைகேடாக விற்று ரூ.195 கோடியை மறைத்து வைத்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தில் மறைமுகமாகத் தொகையை முதலீடு செய்தார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் அமலாக்க இயக்குனரகத்தின் தென் மண்டல அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அந்த தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை அரசு பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குனரக விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. நிறுவனத்திற்கு ரூ.566.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.