சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங்கை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தில் இயங்கி வருகின்றன. இதில், பிஇ, பி.டெக் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு தமிழக அரசு ஒற்றைச் சாளர கவுன்சிலிங் நடத்துகிறது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில், இந்த கவுன்சிலிங் ஆன்லைனில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, 2.09 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் இன்று (ஜூலை 22) தொடங்கியது. முதல்கட்டமாக, சிறப்பு பிரிவில், 3,743 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், விளையாட்டு பிரிவில், 2,112; ஊனமுற்றோர், 408; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், 1,223.
இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கில் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 387 பேர் பங்கேற்க உள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை இடங்கள் ஒதுக்கப்படும். அதன்பின், பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் 29ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறும். விவரங்களை https://www.tneaonline.org/ இல் காணலாம்.