சென்னை: தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தூத்துக்குடியில் மட்டும் 2 நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இவற்றில் ஒன்று வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட், உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர். இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் மின்சார கார் தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, தூத்துக்குடி சிலானந்தம் பகுதியில் 408 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதை ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கட்டுமான பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 114 ஏக்கர் நிலத்தில் ரூ.1120 கோடியில் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50,000 வாகனங்கள் தயாரிக்க 2 பட்டறைகள், 2 கிடங்குகள் மற்றும் கார் சோதனை மைதானம் இருக்கும்.