சென்னை: தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கு ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணிகளுக்கான 2-ம் கட்ட தேர்வு மார்ச் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 90% பேருக்கு தெலுங்கானாவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தேர்வு எழுத 1000 கி.மீ.க்கு அப்பால் செல்வது தேர்வர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், இதுபோன்ற முறைகேடுகளால் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் சேரும் உந்துதலை குறைக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை, தமிழக தேர்வர்களுக்கு, தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும்,” என்றார்.