கோவையில் நடைபெற்ற பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கட்டுமானப் பொருட்களில் கூட கமிஷன் பார்க்கிறது என்றும், விலைவாசி அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மீண்டும் அமைதிப்பூங்காவாக மாறும் என்றும், போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 காவலர்கள் கொல்லப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

அவர் தனது உரையில், கோவை தொழில் மாவட்டமாக இருந்த நிலையிலிருந்து தற்போது தளர்ச்சி அடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்தார். அதிமுக ஆட்சியில் மூன்று ஷிப்ட்களில் நடைபெற்ற தொழில்கள், திமுக ஆட்சியில் ஒரு ஷிப்டாக குறைந்துவிட்டதாகவும், இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். போதைப்பொருள் பரவல் அதிகரித்து மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது என்றும், திமுக அரசு கவனக்குறைவாக செயல்படுகிறது என்றும் அவர் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி, 525 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி போன்ற அனைத்தும் அதிகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். மின்கட்டணமும் 67% உயர்ந்திருப்பதாகவும், தொழில்கள் மீது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப நலனையே முன்னிலைப்படுத்துகிறார்கள், ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கும் முன்னேற்ற வாய்ப்பு உண்டு என்று கூறினார்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை எடுத்துக்காட்டிய அவர், மண், ஜல்லி, கம்பி, செங்கல் என அனைத்தும் இரட்டிப்பு விலையில் விற்கப்படுவதாக சாடினார். ஏழை மக்களுக்கு வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், திமுக அரசின் செயல்பாடு முழுமையாக மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு சேலை வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுத்தல் போன்ற பலன்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.