தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினங்களில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையால் அரையாண்டுத் தேர்வு நடைபெறாத பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”ஃபென்சல் புயல் பாதிப்பால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கனமழை காரணமாக தற்போது தேர்வு நடத்த முடியாத மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும். இருப்பினும், அரையாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும்” என்றார்.