
சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 டாக்டர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 5-ம் தேதி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 23,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முடிந்ததும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். பல்வேறு வழக்குகளால் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது 296 உதவிப் பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்களாகவும், 110 இணைப் பேராசிரியர்கள் துறைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல், இணை இயக்குனராக இருந்த நான்கு பேர், கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 18 பேர் தலைமை சிவில் மருத்துவராக இருந்து இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி 428 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 1,200 செவிலியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த மீதமுள்ள 940 பேர் மொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி, டிச., 2ல், 2,140 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வழக்குகளால், பணிகள் நிலுவையில் உள்ளன.
பிசியோதெரபி பிரிவில் 47 பணியிடங்களுக்கு 8,772 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் தேங்கிய மருத்துவமனைகளில் ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் அரவிந்த், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.