தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், பாம்பர்புரம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சுற்றுலா பயணிகள் இல்லாததால் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிக்கு நீர்வரத்து குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.