தென்காசி: பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலை நீட்டிக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தென்காசி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக பாலக்காடுக்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலை திருநெல்வேலியில் இருந்து துறைமுக நகரமான தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் முதன்முறையாக தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தென்காசி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை, தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்த தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது 18 பெட்டிகளுடன் மேலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்பட்டதால் திருநெவேலி ரயில் நிலையத்தில் நெரிசல் குறைந்தது. இதனால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க முடியும். செங்கோட்டை-புனலூர் இடையே மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளதால், திருநெல்வேலி-கொல்லத்தில் இருந்து நேரடி ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.