ஈரோடு: உள்ளூர் சந்தையில் நுகர்வு குறைந்ததாலும், ஏற்றுமதி குறைந்ததாலும் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டு மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து புதிய மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 13-ம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 21,369-க்கு விற்பனையானது. அதன்பின், மஞ்சள் விலை படிப்படியாக குறைந்து வந்தது.
பொதுவாக, நாடு முழுவதும் மஞ்சள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் மஞ்சளை தேவையான அளவில் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் ஈரோடு மஞ்சள் மார்க்கெட் உட்பட அனைத்து மார்க்கெட்களிலும் வர்த்தகம் குறைந்து விலை சரிந்துள்ளது.