கொடைக்கானல்: கொடைக்கானலில் உறையும் பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாய நிலங்களில் பனிப்பொழிவு காரணமாக செடிகள் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி நிலவுவது வழக்கம்.
இம்முறை, டிசம்பரில் பரவலாக மழை பெய்ததால், உறைபனி குறைந்து, அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பம் வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவுகிறது. பகலில் 10 முதல் 14 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 5 முதல் 9 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை இருக்கும். அதிகாலையில், புல்வெளிகள் வெள்ளை பனியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் உறைந்திருக்கும்.
கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த சூழலை மிகவும் ரசிக்கின்றனர். மதியம் 3 மணி வரை சூரியன் இதமாக இருக்கும். அதன் பிறகு, குளிர் படிப்படியாக அதிகரித்து, நடு இரவில் உறையும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தீ மூட்டி குளிரில் தவித்து வருகின்றனர்.
தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியஸுக்கு கீழே வெப்பநிலை குறையும். தோட்டக்கலைத்துறையினர் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் உள்ள செடிகளை நிழல் வலைகளால் மூடி பாதுகாத்து வருகின்றனர். அதே நேரத்தில் விவசாய நிலங்களில் பனிப்பொழிவு காரணமாக செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.