சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணிக்கு இடையிலான உள்அரசியல் மோதல், தற்போது ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி குறித்து, அதனை அன்புமணி தான் வைத்துள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ராமதாஸ் அமர்ந்த இருக்கையின் அருகில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், “அந்த கருவியை வைத்தது யார் என்பது எனக்குத் தெரியும்,” என்று ராமதாஸ் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமக எனது கட்சி. நான்தான் அதன் தலைவர். கட்சியை வளர்க்க 96 ஆயிரம் கிராமங்களுக்கு பயணித்தேன். எனது இருக்கையில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்து வேவுபார்த்தது என் மகன் அன்புமணி தான்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “தந்தையை வேவுபார்க்கும் பிள்ளை உலகில் யாரும் இல்லை. இருந்தால் ஒரே நபர் – அன்புமணிதான். இது நியாயமா? அவரது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. பாமகவின் பெயரில் அவர் நடத்தும் பொதுக்குழு செல்லாது. அதற்கு எந்த விதிப்படியான அறிவிப்பும் இல்லை,” எனத் தெரிவித்தார்.
இதனுடன், “பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்களை அழைக்க கூடாது என்று அன்புமணி தொலைபேசியில் அறிவுறுத்தினார். அதன் விளைவாக, வெறும் 8 பேர்தான் அந்த கூட்டத்திற்கு வந்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” எனவும் கூறினார்.
இவ்வாறாக, பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் தற்போது கட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.