சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கருவி விரைவில் வரவுள்ளது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள். வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு 75,000-க்கும் மேற்பட்டோரும் பயணம் செய்கின்றனர். இந்த 2 ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் நிலைய கண்காணிப்பு அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 இடங்களிலும் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆட்டோமேட்டட் எக்ஸ்டெர்னல் டிஃபிபிரிலேட்டர்ஸ் (AEDs) எனப்படும் இந்த சாதனங்கள், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டாலோ அல்லது இதய செயலிழப்பு காரணமாக சுயநினைவை இழந்தாலோ முதலுதவி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
ஒருவரின் இதயம் திடீரென நின்று சுயநினைவை இழக்கும் போது இந்த கருவி மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும். முதற்கட்டமாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.