ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 74 பேரையும், 8 விசைப் படகுகளையும், 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். 2018 முதல் இதுவரை இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட நீராவி படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்திய, இலங்கை மீனவர்களுக்கு பிரச்னையின்றி மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கும் உரிய சிகிச்சை அளித்து அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் எம்எல்ஏவும், திமுக மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), ராபர்ட் புரூஸ் (நெல்லி), பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் எம்எல்ஏ, இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, நகராட்சி தலைவர்கள் நாசர்கான் (ராமேஸ்வரம்), கார்மேகம் (ராமநாதபுரம்). மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, தேவதாஸ், போஸ், எமரிட்டஸ் சகாயம், கரல்மார்க்ஸ், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.விஜய் வசந்த் கூறியதாவது: வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் மீனவர் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், பார்லிமென்ட் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.