சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளிலும், 700-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் இங்கு வந்து தாங்கள் பிடிக்கும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தின் அனைத்து கடலோர பகுதிகளிலும் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நேற்று அதிகாலை முதல் மீன் பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். இயந்திரப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பியதால் மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

வஞ்சிரம், வௌவால், ஷீலா, சங்கரா, பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட பெரிய மீன்கள் அதிகளவில் வந்தன. இதையடுத்து மீன் பிரியர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். அதேபோல், சில்லறை விற்பனைக் கடைகளும் அதிகளவில் இருந்தன. நேற்று அதிகளவில் மீன் வரத்து இருந்தபோதிலும், விலையும் அதிகரித்தது.
அதில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1100, கொடுவா ரூ.800, வௌவால் ரூ.650, ஷீலா ரூ.500, பால் சுறா ரூ.600, சங்கரா ரூ.400, பாறை ரூ.400, இறால் ரூ.300 என விற்பனையானது. இதேபோல் இறால் ரூ.550, நண்டு ரூ.450, நவரை ரூ.300, பண்ணா ரூ.300, காணாங்கத்தை ரூ.300, கடுமா ரூ.500, நெத்திலி ரூ.200 என விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் அசைவ பிரியர்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.