மேட்டூர்: மேட்டூர் அணை இந்த ஆண்டு 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 16 மதகுகள் வழியாக எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த 30ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் 16 மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு கடந்த 7ம் தேதி நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனிடையே, கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6,548 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 24,352 கன அடியாக அதிகரித்தது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று காலை முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 21,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.24 அடியில் இருந்து 119.65 அடியாகவும், நீர் இருப்பு 92.26 டிஎம்சியில் இருந்து 92.91 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை மீண்டும் 2வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அணைக்கு கூடுதல் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 16 கண்மாய்கள் மூலம் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கேற்ப நீர்மின் நிலையங்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், விரைவில் 120 அடியை எட்டும். அப்போது, 16 கண்மாய்கள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்படும் என்றனர். இந்நிலையில், 16 கண்மாய்களை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.