சென்னை; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலையில் இருந்து குற்றியாறு இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கல்லார், முடவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகம் உள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கும் திருமலை நம்பி கோயிலுக்கு செல்லவும் வனத்துறையினர் இன்று ஒரு நாள் மட்டும் தடை விதித்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் நீர் வரத்து சீராகும் வரை தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.