விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ₹2.50 கோடி மதிப்பிலான விளை பொருட்கள் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்த மணிலா, எள், உளுத்தம் பருப்பு மூட்டைகள் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மதியம் பெய்த மழையால், விற்பனை கூடத்தில் வெள்ளம் புகுந்து, கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எள், உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மணிலா மூட்டைகள் மழையில் மிதந்தன. இந்நிலையில் நேற்றிரவு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாத்தனூர் ஏரி உடைந்து கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து கிராமத்தில் உள்ள சுமார் 200 வீடுகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.