உதகை: நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நீர்வீழ்ச்சி, கல் இருக்கைகள், அலங்காரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை இங்கு உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பச்சை புல்லில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும், நர்சரியில் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்திருப்பதை கண்டு மகிழ்கின்றனர்.
கோடை சீசன் தவிர, பள்ளி பருவ விடுமுறையான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் இரண்டாவது சீசன் ஆகும்.
இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கர்நாடக அரசு பூங்காவில் மலர்கள் நடப்பட்டுள்ளன.
பூச்செடிகளில் உரமிட்டு செடிகள் நடப்பட்டுள்ளன. இங்கு சால்வியா, டேலியா, பெகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரனியம், காலெண்டுலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ரகங்களில் 80 ஆயிரம் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.
இப்போது அவற்றில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.