தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழன் 1040-வது சதய விழா வரும் 31ம் தேதி மற்றும் நவ. 1ம் என 2 நாட்கள் நடக்கிறது என்று சதயவிழாக்குழு தலைவர் து.செல்வம் தெரிவித்தார்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1040-வது சதய விழா வரும் 31 மற்றும் 1ம் தேதி என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நேற்று தஞ்சை பெரிய கோயிலில் சதய விழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதயவிழா வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.15 மணிக்கு அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் ஊர்வலத்தை அமைச்சர் கோ.வி.செழியன் தொடக்கி வைக்கிறார். இதில் எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து பெரிய கோயில் வளாகத்தில் 1040-ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு 400 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகிக்கிறார். திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். பின்னர் வரலாறாக வாழும் மாமன்னன் இராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவில் இரண்டாம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின்னர் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும், மாமன்னர் ராசராச சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பல்வேறு கட்சி,அமைப்பு, இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கின்றனர். காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருஉலா நடைபெறும்.
இதையடுத்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தேவார பண்ணிசையும் நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கும். இரவு 7 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். சதய விழா காணவரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.