தஞ்சாவூர்: பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்ட, ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிராமத்தில் வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் கலைச்செல்வன், ராக்கேஸ் பெர்நாத் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜி, செல்வராஜ் ஆகியோர், வலைகளைப் பயன்படுத்தி மடையான் பறவைகளை வேட்டையாடி வைத்திருந்தனர்.
இதையடுத்து, இருவரையும் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்த் குமார் உத்தரவின்படி, இருவர் மீதும் வனக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், இருவருக்கும் தலா 5 ஆயிரம் வீதம், மொத்தம் 10 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதித்து, அபராதம் வசூலிக்கப்பட்டு, குற்றவழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேலும், உயிருடன் இருந்த 10 மடையான் பறவைகளை அருகில் உள்ள ஏரியில் நல்ல நிலையில் பறக்க விடப்பட்டது.