கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.
அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.
அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர். தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.