பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமத்திற்குள் புகுந்த யானைகளை விரட்ட வனத்துறையினர் மத யானையின் சாணத்தை எரித்து புகை மூட்டியுள்ளனர். பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’ காட்டு யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் ஆளில்லா கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இளம் ஆண் காட்டு யானை வீடுகளை நாசம் செய்து அரிசியை தின்று வருகிறது. மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி உள்ளே செல்வது சுலபம் என்பதால், அப்பகுதிகளில் ‘புல்லட் ராஜா’ யானை தொடர்ந்து நடமாடி வருகிறது. நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், யானை கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க யானையின் சாணத்தில் தெளித்தல், புகை, மிளகாய் பொடி தடவிய துணி தார்பாய் போன்ற மாற்று வழிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மிளகாய் பொடி தடவிய குளிர் துணி தார்பாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த யானை, பகலில் வனப்பகுதியில் மேய்ந்தாலும், அரிசியின் சுவைக்கு பழகி, இரவில் கிராமத்திற்கு வரும். இரவு நேரங்களில் ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள், தெர்மல் கேமராக்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதம் பிடித்த ஆண் யானை நடமாடும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்ப்பதால், தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளின் சாணத்தை சேகரித்து பல பகுதிகளில் தெளித்து வருகிறோம்.
யானையின் சாணத்தில் தீ வைத்து புகை மூட்டப்படுகிறது. வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் மிளகாய் பொடி தடவிய துணிகள் உள்ளன. இதன் மூலம் யானை கிராமத்திற்குள் வராமல் தடுக்க முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். வனத்துறையின் இந்த புதுமையான முயற்சி பலன் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.