சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். ஓராண்டுக்கும் மேலாக, சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி, அவ்வப்போது உடல் நலக்குறைவால், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நீதிமன்ற காவல் சமீபத்தில் 48வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை புழல் சிறையில் இருந்து போலீஸார் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய செந்தில் பாலாஜியை இன்று ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.