பள்ளி மாணவர் இலவச பேருந்து பயண அட்டைக்கு EMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ம் தேதி பள்ளிகள் துவங்குகிறது.இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பழைய இலவச பஸ் பாஸை பயன்படுத்தி பஸ்களில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர்கள் நலன்புரி பயண அட்டை பெற EMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் EMIS தளத்தில் சென்று மாணவர்கள் பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த பணியை உயர் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பயன்படுத்தி உடனடியாக முடிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.