புதுடெல்லி: மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் தொடங்குகிறது. முதல் முறையாக பல உலக சாதனைகளை படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, மகா கும்பமேளாவுக்கு வரும் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்படும். அப்போது கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நேத்ரா கும்பம் (கண் கும்பம்) என்று அழைக்கப்படும் இந்த முகாம் ஜனவரி 5-ம் தேதி திரிவேணி சங்கமத்தில் தொடங்கப்படுகிறது. இது குறித்து ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் ரஞ்சன் பாஜ்பாய் கூறுகையில், “இந்த மகா கும்பமேளாவில் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மூன்று லட்சம் பேருக்கு இலவச கண்ணாடியும் வழங்கப்படும். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ முகாம் அமைக்கப்படும்.
140 மருத்துவர்களைக் கொண்ட இந்த முகாமில் தினமும் சுமார் 10,000 பேருக்கு இலவச கண் பரிசோதனைகள் செய்யப்படும்” என்றார். இந்த முகாமை ஜூனா அகலா தலைவர் ஆச்சார்யா மஹா மண்டலேஷ்வர் அவதேசானந்த் கிரி மகாராஜ் ஜனவரி 5-ம் தேதி தொடங்கி வைக்கிறார். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான இலவச கண் சிகிச்சை செய்து கின்னஸ் சாதனை படைக்க உ.பி அரசு திட்டமிட்டுள்ளது.
அதே மகா கும்பமேளாவில் தனியாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இத்துடன் பார்வையாளர்களை கவரும் வகையில் லேசர் காட்சிகளும் நடத்தப்பட உள்ளன. மாலையில், 2,000 ட்ரோன்கள் வானில் பறக்கும், உ.பி அரசு லேசர் ஒளியில் புராணங்களின் காட்சிகளை காண்பிக்கும்.