தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோடி அம்மன் கோவிலில் 16 ஏழை ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் 700 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கான செலவை கோவில்களே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏழை எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.
இதை அடுத்து இன்று தஞ்சை இணை ஆணையர் மண்டலத்தின் சார்பில் தஞ்சை கோடி அம்மன் கோவிலில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் தஞ்சை கோடி அம்மன் கோவிலில் நடந்த விழாவிற்கு இந்து அறநிலையத்துறை மண்டல இணை இயக்குனர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி பான்ஸ்லே, உதவி
ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 16 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சன் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம் புத்தாடை மிக்ஸி பீரோ கட்டில் கைகடிகாரம் மெத்தை பாத்திரங்கள் உள்பட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாசம் திட்டை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் மணிகண்டன் பெரிய கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமரன் திமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.