சென்னை: மூத்த குடிமக்களின் நலனுக்காக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக அரசு நிதியில் இலவச ஆன்மீக பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இதுவரை, ஆடி மாதத்தில் 3,004 பக்தர்கள், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,514 பக்தர்கள், ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 920 பக்தர்கள், அறுபடை வீடுகளுக்கு 2,615 பக்தர்கள் இலவச ஆன்மீக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிதியாண்டில் புரட்டாசி மாதத்தில் 2,000 பக்தர்களை வைணவ கோயில்களுக்கு இலவசமாக ஆன்மீக பயணம் அழைத்துச் செல்வார்கள் என்ற சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னையில் பங்கேற்ற 70 பக்தர்களுக்கு பயணப் பைகள் மற்றும் கோயில் பிரசாதங்களை வழங்கி இரண்டாம் கட்ட ஆன்மீக பயணத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

இதேபோல், புரட்டாசி மாத ஆன்மீக பயணத்தில் 491 பக்தர்கள் பங்கேற்றனர், இதில் காஞ்சிபுரம் மண்டலத்தில் 60 பக்தர்கள், விழுப்புரம் மண்டலத்தில் 71 பக்தர்கள், திருச்சி மண்டலத்தில் 70 பக்தர்கள், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களில் 70 பக்தர்கள், மதுரை மண்டலத்தில் 70 பக்தர்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் 80 பக்தர்கள் என மொத்தம் 491 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில், திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு தரிசனம் அளிக்கப்பட்டு, காலை உணவு, மதிய உணவு மற்றும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் கோ.செ. மங்கையர்கரசி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.