தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, செட்டிகுளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் சின்ன வெங்காயம், மற்ற பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயத்தை விட அதிக காரத்தன்மை, முளைக்கும் திறன், மருத்துவ குணம், தனி சுவை கொண்டது.

15-18 அடுக்கு உலர் வெளிப்புற செதில்கள் கொண்ட இந்த சின்ன வெங்காயம் ஒரு வருடம் வரை சேமிக்கப்படும். 2022-ல், மாவட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில், விவசாயிகள் குழு அமைக்கப்பட்டு, இந்த தனிச்சிறப்புமிக்க சின்ன வெங்காயத்திற்கான புவியியல் குறியீடு கோரி, மத்திய அரசிடம் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு செட்டிகுளம் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசு நேற்று புவிசார் குறியீடு (ஜிஐ) வழங்கியது. பெரம்பலூர் மாவட்ட செட்டிகுளம் சின்ன வெங்காயத்தை சர்வதேச அளவில் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.