
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11-வது ஆண்டு விழாவையொட்டி அதன் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- பெருந்தலைவர் காமராஜ், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியுடன், இயக்கம் தொடங்கிய நாள் முதல், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வருவது, கட்சிக்கு வலு சேர்க்கிறது.
கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் முடிந்து 11-வது ஆண்டில் ஒரு படி முன்னேறியதற்கு கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்பே காரணம். இந்நிலையில், கட்சி தொடர்ந்து வளர வேண்டும் என்பதற்காக, உறுப்பினர் சேர்க்கும் பணியில், த.மா.கா.,வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நாளில் வளமான தமிழகத்தையும் வலிமையான இந்தியாவையும் உருவாக்க உறுதி ஏற்போம். நேர்மை, எளிமை, தூய்மை ஆகிய கொள்கைகளைப் பின்பற்றி தமிழர்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (மூ) தெரிவித்துள்ளது.