சென்னை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தங்கத்தின் விலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம்தேதி 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்தார். இதனால் அன்று தொடங்கி தங்கத்தின் விலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாகக் குறைந்து வந்தது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. உலகளாவிய தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது.
இந்நிலையில் தங்க விலை தொடர் சரிவு, அதில் முதலீடு செய்திருந்த குடும்பங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில்தான் தங்கத்தின் விலை இன்று சற்றே ஏற்றம் கண்டுள்ளது.