தமிழக அரசு, அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர், தோட்டக்கலை தொழிலாளர் போன்ற 1.5 லட்சம் நிரந்தர அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்றி, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தங்களைப் பணி நிரந்தரமாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால், ஏற்கனவே உள்ள 1.5 லட்சம் நிரந்தரப் பணியிடங்களையும் ஒரே கையெழுத்தில் தற்காலிக பணியிடங்களாக திமுக அரசு மாற்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சீமான் மேலும் கூறியுள்ளதாவது, “ஆட்சிக்கு வந்தால் காலியாகவுள்ள 3.5 லட்சம் அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் அரசுப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும், தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரமாக்குவோம் என்றெல்லாம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்து 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு லட்சம் அரசுப்பணியிடங்களைக் கூட இதுவரை நிரப்பவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர், தோட்டக்கலை தொழிலாளர் போன்ற பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த 1.5 லட்சம் அரசுப் பணியிடங்களிலும் இனி வரும் காலங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய முடியாது என திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே, “தமிழக அரசின் இந்த செயல் நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியிடங்களாக மாற்றித் தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதுதான் சாதனையா?” எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, “இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? ஆகவே, 1.5 அரசுப்பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.