தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டால் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், பலர் விதிமுறைகளை மீறி சம்பந்தமில்லாத பாடங்களில் பட்டம் பெற்று ஊக்க ஊதிய உயர்வை பெற்றுள்ளனர். இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிய தகுதி இல்லாமல் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து அந்த தொகையை திரும்பப் பெறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் இடைநிலை நிலையிலிருந்து பட்டதாரி நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுக்கான தகுதிகளில், அவர்கள் தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது. இந்த அடிப்படையில் பல ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்றுள்ளனர்.
இதேநேரம், சில ஆசிரியர்கள் வேறு பாடங்களில், உதாரணமாக எம்.ஏ., எம்.காம். ஆகியவற்றில் பட்டம் பெற்று ஊதிய உயர்வு பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, நீதிமன்றம் அந்த ஊதிய உயர்வுகளை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஊக்க ஊதிய உயர்வு பெற்ற 766 பேரின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் தவறுதலாக அந்த உயர்வைப் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
கல்வித்துறை பிறப்பித்த சுற்றறிக்கையின் படி, அந்த ஆசிரியர்களிடம் இருந்து அதிகமாக செலுத்தப்பட்ட தொகையைத் திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வை தவறாக வழங்கிய அலுவலர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும், 20ம் தேதிக்குள் அந்த விவரங்களை அரசு மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.