சென்னை: ஐடி மூலம் பல்வேறு அரசு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜனவரி மாதம் ஒரு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் நோக்கில், அரசின் அனைத்து நிலைகளிலும் படிப்படியாக மின் ஆளுமையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் முழுமையான ஆட்சியை அடைவதற்காக, தமிழக அரசு, ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டத்தை’ அறிவித்தது.
அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிர்வாகத் திறன், டிஜிட்டல் இணைப்புகள், அரசு சேவை வழங்குதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ உருவாக்கப்பட்டது. அரசுத் துறைகள் தங்களுக்கென டிஜிட்டல் உருமாற்ற உத்தியை உருவாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையால் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் உத்தி’ ஆவணத்தை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 2, 2023 அன்று வெளியிட்டார்.
இதன் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை வலுப்படுத்துவதும், அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை வசதியாக அணுகுவதை உறுதி செய்வதும் ஆகும். இந்த வகையில், ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குதல், மாநிலத்தை தொழில் முனைவோர் மையமாக மாற்றுதல், நவீன ஆப்ஸ் மற்றும் இணையதளங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்த டிஜிட்டல் திட்டங்கள் குறித்து 2025 ஜனவரியில் ஒரு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.